சென்னை:
அந்தமான் தீவு அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை விடிய விடிய கொட்டியது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பலத்த மழை நீடிக்கும். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பகுதிகளான நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கடல் சீற்றமாக காணப்படுவதால் நாகை மாவட்ட மீனவர்கள் 80 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை கடுவையாற்று பகுதியில் விசைபடகுகளும், பைபர் படகுகளும் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய பகுதிகளிலும், தஞ்சை மாவட்டத்தில் சேது பாவா சத்திரம் பகுதியில் நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
இன்றும் 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் 2 வாரத்துக்கு பிறகு மீண்டும் மழை வலுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் நகரில் மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 12 மணிவரை நீடித்தது. இதேபோல் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது.
விடிய, விடிய பெய்த அடைமழையால் ராமேசுவரத்தில் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. மின் தடையும் ஏற்பட்டது. ராமேசுவரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.