நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாலை 3 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார், வடசேரி, மீனாட்சிபுரம் என நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்துச் சென்றது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதேபோல கன்னியாகுமரி, கொட்டாரம், பூதப்பாண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக நாகர்கோவிலில் 18.5 மில்லி மீட்டர் மழை பதிவானது.
தொடர் மழையால் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதுவரை 198 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 420 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன. 596 குளங்கள் 50 சதவீதம் நிரம்பி இருக்கின்றன.
திற்பரப்பு அருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு குளித்தனர்.
இன்று 4-வது நாளாக நாகர்கோவில் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. மழை காரணமாக குலசேகரம் பகுதியில் ரப்பர் பால் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் பேச்சிப்பாறை அணை தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் கன்னிப்பூ சாகுபடி பணியும் தாமதமாக தொடங்கியது. தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பூதப்பாண்டி -11.4, கொட்டாரம் -15.2, பெருஞ்சாணி 6.2. ஆலஞ்சி-10.2.