காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதற்கு முன் 23 மூத்த தலைவர்கள் நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். முறைப்படி எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கடிதம் எழுதியிருந்தனர்.
இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. சோனியா காந்தி தொடர்ந்து தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சோனியா காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவருமான சல்மான் குர்ஷித் உடனடியாக தேர்தல் நடத்தவில்லை என்றால் வானம் இடிந்து விழாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘என்னைப் போன்றவர்களுக்கு ஏற்கனவே தலைவர்கள் உள்ளனர். சோனியா காந்தி எங்களுக்கு தலைவராக இருக்கிறார். ராகுல் காந்தியும் எங்கள் தலைவர். அதனால் எனக்கு தேர்தல் நடத்தி உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் அவசரம் இல்லை. தலைவருக்கான தேர்தல் வேண்டும். நடக்கும்போது அது நடக்கும். இதனால் வானம் விழும் என்று என்னால் கூற முடியாது. வெளிப்படுத்தப்படும் அவசர உணர்வு என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை’’ என்றார்.