சென்னை:
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்திடவும் முற்றிலுமாக தடுத்திடவும் அரசு எண்ணற்ற தொடர் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சல் என்பதும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சலே. டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகி பகல் பொழுதில் கடிக்கும் “ஏடிஸ்” வகை கொசுவினால் பரவுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், தேவையற்ற பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளைச் கொசுக்கள் புகாமல் நன்கு மூடி வைக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதால் ஏடிஸ் வகை கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.
தமிழக மக்களை டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் கூடுதலாக ரூபாய் 13 கோடியே 95 இலட்சம் மதிப்பில் கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு ஒழிப்பு பணியில் 40,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் (மஸ்தூர்கள்) தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் 24 மணி நேரமும் (24X7) செயல்படும் காய்ச்சலுக்கான பிரத்யேகமான சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும், காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எலிசா முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் மையங்கள் 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம். புதிதாக ரூ 23.50 கோடி மதிப்பில் 837 இரத்த அணு அளவீட்டுக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவையான பரிசோதனைக் கருவிகள், மருந்து மாத்திரைகள், இரத்தம், இரத்த தட்டணுக்கள் ஆகியவற்றின் இருப்புகளை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.
தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் களப்பணியாளர்களுக்கும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கும், தனியார் மருத்துவர்களுக்கும் தொடர் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 2000 கிலோ நிலவேம்பு பொடி டாம்ப்கால் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் கஷாயமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த பல நாட்களாக சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் 35 ஆட்டோக்கள் மூலம் 1,50,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.