செய்திகள்

வீட்டில் சேகரிக்கும் தண்ணீரில் பரவும் டெங்கு வைரஸ்: சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

வறட்சியின்போது தண்ணீரை வீட்டில் சேமித்ததால் டெங்கு வைரஸ் பரவுகிறது என்று சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தான் அதிகமாக காணப்படுகிறது.

இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியதற்கு தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட இடங்களில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கத் தொடங்கினர். பற்றாக்குறை இல்லாத இடங்களில் முதன் முறையாக வறட்சி ஏற்பட்ட போது, மக்கள் தண்ணீரைச் சேமித்தாலும் அதில் ஏடிஸ் கொசுக்கள் பரவாமல் பாதுகாக்கத் தெரியவில்லை.

போதிய அளவு கிடைக்காததால் அதிக நாட்கள் தண்ணீரைச் சேமித்து வைத்தனர். அதில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்தன. இதுவே டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு மூலக் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் டெங்கு பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது பேப்பர் கப்புகள், பிளாஸ் டிக்குள் போன்றவை ஏடிஸ் கொசுக்களுக்கு நிரந்தர இருப்பிடமாக மாறின.

தமிழகத்துக்கு மழைப் பொழிவைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ததால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்பில்லை. ஆனால் இந்த ஆண்டு பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு என்று எந்தவித தடுப்பு மருந்துகளோ பிரத்யேக சிகிச்சைகளோ கிடையாது. சர்வதேச நெறி முறைகளைப் பின்பற்றி அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் டெங்கு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை பொருத்தவரை அதிக தாமதத்தால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும். அதன் காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரக் கூடும். எனவே காய்ச்சல் பாதித்த உடனேயே மருத்து வரை அணுக வேண்டியது அவசியம்.

டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள பாரம்பரிய சித்த மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு வயதுக்கு தகுந்தாற்போல நிலவேம்பு குடிநீரை கொதிக்க வைத்து கொடுக்க வேண்டும். தயாரித்த 3 மணி நேரத்துக்குள் பருக வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு 10 மி.லி.வீதம் மலைவேம்பு இலைச்சாறை 2 அல்லது 3 வேளைகள் குடிக்க வேண்டும். தொடர்ந்து 5 நாட்களுக்கு இதை குடித்தால் அனைத்து வைரஸ் காய்ச்சல்களுக்கும் தீர்வாக அமையும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு பப்பாளி இலைச்சாறை 10 மி.லி வீதம் ஒரு நாளைக்கு 4 முறை கொடுக்க வேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.