ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் மோசஸ் செபஸ்டின் அப்பகுதியில் உள்ள வீட்டு வாசலில் இறந்து கிடந்த காட்சி 
செய்திகள்

ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய சென்னை என்ஜினீயர் பலி

மணப்பாறை அருகே நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை என்ஜினீயர் உதவி கிடைக்காமல் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

மணப்பாறை:

திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்மலை அருகே உள்ள பேத்துப்பாறை பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் செபஸ்டின் (வயது 32). என்ஜினீயரான இவர் சென்னையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். உறவினர்களை பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டுச்சென்றார். அவருடன் நண்பர் ஒருவரும் சென்றார். இருவரும் முன்பதிவில்லா பெட்டியில் அமர்ந்து பயணித்தனர்.

உடன் வந்தவர் தூங்கிக் கொண்டிருக்க ரெயில், திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது ரெயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்ததை பார்த்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

பின்னர் ரெயிலில் வந்தவர்களிடம் இது குறித்து கேட்டபோது தான், ஒருவர் தன்னுடன் வந்த மோசஸ் செபஸ்டினை காணவில்லை என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன் ரெயிலில் இருந்த அந்த நபரை இறக்கி விட்ட பின்பு ரெயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்த சம்பவம் குறித்து மணப்பாறை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும், திருச்சி ரெயில்வே போலீசாருக்கும் நள்ளிரவில் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை ஜி.என்.ஆர். மீட்புக்குழு நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் முருகேசன், மகாராஜா, சதாம் உசேன் உள்ளிட்டோர் நள்ளிரவில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மணப்பாறை ரெயில் நிலையம் அருகே உள்ள கீரைத் தோட்டத்தில் ஒரு வீட்டு வாசலின் முன்பு செல்போனில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதைப்பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் முருகேசன் உடனே அருகில் சென்று பார்த்த போது அங்கு ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் என்று தெரிய வந்தது. மேலும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட மோசஸ் செபஸ்டின் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். பின்னர் சுற்றுச் சுவரை தாண்டி உதவி கேட்டு வந்து வீட்டின் வாசலிலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக இறந்தவரின் செல்போனில் உள்ள எண் மூலம் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும் விரைந்து வந்து இறந்தவரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். மேலும் சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோசஸ் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக என விசாரணை நடக்கிறது.

இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews