செய்திகள்

உங்கள் அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை தீக்கிரையாக்கிவிட்டீர்கள்: அரியானா அரசு மீது நீதிமன்றம் சாடல்

தங்களது அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை தீக்கிரையாக்கிவிட்டதாக அரியானா அரசு மீது அம்மாநில ஐகோர்ட் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளது.

அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் செயல்படும் தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக நேற்று அறிவிக்கப்பட்டார். பஞ்சாப் சிபிஐ சிறப்பு கோர்ட்டின் நீதிபதி ஜகதீப் சிங் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கடும் நெருக்கடிகளுக்கு இடையே அளித்தனர். அவருக்கான தண்டனை விவரம் 28-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை கேட்டதும் குர்மீத் ராமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே ஆசிரமம் உள்ள சிர்சா பகுதியிலும் கலவரம் வெடித்தது. பஞ்சாப், அரியானாவில் ஏற்பட்ட கலவரம் நேரம் செல்லச் செல்ல ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது.

இந்நிலையில், தங்களது அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை தீக்கிரையாக்கிவிட்டதாக அரியானா அரசு மீது பஞ்சாப்-அரியானா ஐகோர்ட் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளது.

மேலும், சாமியார் ராம் ரகீமின் அசையும், அசையாத சொத்துக்களின் முழு விவரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆக்ஸ்ட் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

SCROLL FOR NEXT