குஜராத் மாநிலம், காந்திநகரில் கடந்த 2005-ம் ஆண்டு போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, அவரது மனைவியையும் காணவில்லை. அவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சொராபுதீனின் கூட்டாளியும், இந்த என்கவுன்ட்டரை நேரில் பார்த்த சாட்சியாகக் கூறப்படும் துளசிராம் பிரஜாபதியும், குஜராத் மாநிலம், சாப்ரி கிராமத்தில் 2006-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால், இவை போலி என்கவுன்ட்டர்கள் என்றும், இதனை சில காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்த்தினார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பிறகு, இந்த என்கவுன்ட்டர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அமித்ஷாவை கடந்த 2010-ம் ஆண்டு ஜுலை மாதம் கைது செய்தது. இதனால் தனது அமைச்சர் பதவியை அப்போது அவர் ராஜினாமா செய்தார். எனினும், 3 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமின் அளித்தது.
இந்த வழக்கு விசாரணையை குஜராத் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என சி.பி.ஐ. விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணை மும்பையில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றார். அதன் பின்னர், சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் இருந்து அமித்ஷாவை விடுவித்து, மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்தது தொடர்பாக மும்பை நகர வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றுவரும் சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு விசாரணை தொடர்பாக ஊடகங்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுகொண்ட நீதிபதி சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு விசாரணை தொடர்பாக ஊடகங்கள் செய்தி சேகரிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்தார்.
இந்த தடையை எதிர்த்து சில ஊடகங்களின் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்டது. நிருபர்கள் தங்கள் கடமையை ஆற்றுவதற்கு இந்த தடை உத்தரவு இடையூறாக உள்ளதாக மனுதாரர்களின் சார்பில் வாதிடப்பட்டது. மேலும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் முன்னாள் காவல்துறை அதிகாரிகளாக இருப்பதால் இவ்வழக்கு விசாரணையின் போக்கு தொடர்பான வெளிப்படைத்தன்மையை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஊடகங்களின் உரிமையும் கடமையும் ஆகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி மோதிட்டே-டேரே முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. ஊடகங்கள் செய்தி சேகரிக்க தடை விதித்த உத்தரவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த நீதிபதி மோதிட்டே-டேரே இந்த உத்தரவின் மூலம் சி.பி.ஐ. நீதிமன்றம் தனது அதிகாரவரம்பையும், அரசியலமைப்பு சட்டம் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை மீறியுள்ளதாக குறிப்பிட்டார்.