செய்திகள்

சூப்பர்வைசர் வேலைக்கு அழைத்து மோசடி: நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய போலி நிறுவனம் குறித்து விசாரிக்க உத்தரவு

சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.வைத்தியாநாதனின் வீட்டிற்கு சூப்பர்வைசர் வேலைக்கான ஐந்து போலி நிறுவனங்களின் பெயர்களில் இருந்து கடிதம் வந்ததையடுத்து, அதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் எஸ்.வைத்தியநாதன். வில்லிவாக்கத்தில் இவருக்கு சொந்த வீடு உள்ளது.

நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு இந்த வீட்டில் தான் வைத்தியநாதன் வசித்து வந்தார். அவரது வீட்டு முகவரிக்கு கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை அடுத்தடுத்து கடிதங்கள் வந்தன.

பிரபல நிறுவனங்களான ரிலையன்ஸ், வால்வோ, ரினால்டு, ஏர்டெக் சொலிசன், டைமண்ட் இன்டஸ்ட்ரீயல் ஆகியவை சார்பில் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தன.

அதில், சூப்பர்வைசர் பணிக்கான நேர்முக தேர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நடைபெறுவதாகவும், இதில் கலந்து கொள்ள வரும்போது ரூ.300 முதல் ரூ.750 வரையில் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

அழைப்பு கடிதத்தில் இடம் பெற்றிருந்த தொலைபேசி எண்ணை நீதிபதி வைத்தியநாதன் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பேசிய நபர் தான் ஒரு மாணவர் என்றும் தனக்கும் இது போன்று கடிதங்கள் வந்திருப்பதாகவும் மத்திய அரசின் “ராஜீவ் விகாஸ் யோஜனா” திட்டத்தில் தனக்கு பணி ஒதுக்கி இருப்பதாக குறிப்பிட்டு மத்திய அரசின் முத்திரையுடன் நியமன கடிதம் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட வேண்டும் என்றும் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் நீதிபதி வைத்தியநாதன் முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இதுபற்றி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று மாலை நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர்.

அப்போது நீதிபதி வைத்தியநாதனுக்கு வந்த கடிதத்தை பார்க்கும்போது இது மோசடி நிறுவனம் அனுப்பியுள்ள கடிதம் என்றும், பெரிய நிறுவனங்கள் பெயரை சொல்லி இளைய சமுதாயத்தினரிடம் பணத்தை பறித்து அவர்களை ஏமாற்றுவதற்காக ஒரு கும்பல் செயல்படுவது தெரிய வந்துள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றுபவருக்கே மேற்பார்வையாளர் பதவி வழங்குவதாக அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பல பேருக்கு கடிதம் அனுப்பி நுழைவு கட்டணமாக ரூ.300 முதல் ரூ. 750 வரை மோசடி செய்து உள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.

இந்த மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. பிறப்பிக்க வேண்டும்.

இந்த மோசடி நிறுவனங்கள் இதுவரை எத்தனை பேருக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளது? எத்தனை பேரிடம் இது வரை எவ்வளவு பணம் வசூல் செய்துள்ளனர்? அது ரொக்கமாக வசூலிக்கப்பட்டதா? கேட்பு காசோலை உள்ளிட்ட பிற வகைகளில் வசூலிக்கப்பட்டதா?

இந்த மோசடி நேர்முக தேர்வை நடத்தும் கும்பலில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் மீது வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

மத்திய - மாநில அரசுகளின் முத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் போலீசார் விசாரிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிக்கையை வருகிற 13-ந்தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். சைபர் கிரைம் போலீசாரும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு வருகிற 13-ந்தேதி பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

மத்திய குற்றப்பிரிவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்பவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. அவர்கள் பணி நியமன கடிதம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

மோசடியாக கடிதம் அனுப்பியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை விவரங்களை 13-ந்தேதி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்கிறார்கள்.