திருச்சியைச் சேர்ந்த வினோத், 2008-ம் ஆண்டு திருச்சி ரெயில்வே காவல் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். 2014 டிசம்பரில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில், கொடை ரோடு முதல் திருச்சிராப்பள்ளி வரை பெண் காவலர் ஒருவருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த பெண் பயணி ஒருவரிடம் முறையற்ற வகையில் பேசியதாக, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் படி 2015-ல் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் உறுதி செய்தார். இதனை ரத்து செய்யக்கோரி வினோத் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், “இந்த வழக்கு பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவருடன் பணியாற்றிய பெண் காவலரும் காவலர் வினோத் அன்று மது அருந்தி இருந்ததாகவும் பெண்களிடம் முறையற்ற வகையில் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
பெண்கள் பஸ்கள், ரெயில்கள், விமானங்கள் ஆகியவற்றில் தனியே பயணம் செய்வது இயல்பான ஒன்றாக உள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.
அது போன்ற கொள்கை தென்னக ரெயில்வேயிலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்.
சமீப காலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில், ரெயில்களில் இரவு நேரங்களில் இது போன்ற தொல்லைகள் எழுவதாக புகார்கள் எழுகின்றன. ஆகையால், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும், தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர், ரெயில்களில் பயணிக்கும் பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரெயில் கம்பார்ட்மெண்டில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
ஓடும் ரெயில்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு, பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்.