செய்திகள்

டிடிவி தினகரன் வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்: ஆவணங்கள் தாக்கல் செய்ய இனி அவகாசம் இல்லை

ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க உத்தரவிடக்கோரி டிடிவி தினகரன் தரப்பினர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மாலை மலர்

மதுரை:

அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

எனவே, கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்தது. அதில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிடிவி தினகரன் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகும்படி கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை தேர்தல் ஆணையம் நாளை தொடங்க உள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.