கோப்புப் படம் 
செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுவிலக்கு - மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுவிலக்கு விதிக்கும் கலால் சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதற்கான கொள்கையை வகுக்க உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்துள்ளது.

மாலை மலர்

நைனிடால்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கருடா பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷி . வழக்கறிஞரான இவர் மாநிலத்தில் மதுவிலக்கை கொண்டுவரவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘உத்தரபிரதேச மாநிலத்தில் 1910ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலால் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 37ஏ-ன்படி 1978-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஆனால் உத்தரகண்ட் மாநிலம் உருவாகி 19 ஆண்டுகள் ஆகியும், மாநில அரசு இந்த சட்டத்தின்கீழ் மது விலக்கை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் ஆதரவோடு அதிக அளவில் விற்கப்படும் மதுவால் சமுதாயம் சீரழிந்து வருகின்றது. பொதுமக்களும் பல இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே இந்த சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

இந்நிலையில் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி அலோக் குமார் வர்மா ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலத்தில் மதுவை படிப்படியாக தடை செய்வதற்கான கொள்கை முடிவை எடுக்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்காக ஆறு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளதாக மனுதாரர் ஜோஷி தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு இந்த சட்டத்தின் கீழ், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் மதுபான கடைகள் திறக்கக்கூடாது எனவும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.