செய்திகள்

பீகார்: நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க தடைகோரும் மனு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு பீகார் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மாலை மலர்


பாட்னா:

பீகார் மாநில துணைமுதல்வராக இருந்த தேஜஷ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதையடுத்து அவர் பதவிவிலக வேண்டுமென முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார். ஆனால், தேஜஸ்வி யாதவ் பதவிவிலகாததை அடுத்து முதல்வர் நிதிஷ்குமார் கடந்த புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினர் பாராட்டு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. அவருக்கு ஆதரவளித்ததை அடுத்து அவர் மீண்டும் நேற்று முதல்வராக பதவியேற்றார். இதற்கு மற்ற கட்ச்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவர் ஆட்சி அமைக்க தடைகோரி பீகார் உயர்நீதிமன்றத்தில் ராஷ்த்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்களான சரோஜ் யாதவ் மற்றும் சந்தன் வர்மா, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஜிதேந்தர் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.