திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த செப்டம்பரில்
தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்துசெய்து ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, அங்கிருந்து வீட்டை காலி
செய்து குன்றத்தூருக்கு தனது பெற்றோருடன் சென்றார் தஷ்வந்த்.
கடந்த வாரம் குடிக்க பணம் கேட்டு தரமறுத்த தாய் சரளாவை கொன்று விட்டு 25 சவரன் நகைகளை திருடிக் கொண்டு
தப்பிச்சென்றான். தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் அங்கு வந்து சரளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தலைமறைவான தஷ்வந்தை பிடிக்க 3 தனிப்படை அமைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மும்பையின் பாந்த்ரா பகுதியில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை தமிழக போலீசார் சுற்றி வளைத்து நேற்று
கைது செய்தனர்.
இந்நிலையில், ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் இன்று மும்பையில் போலீசாரிடம் இருந்து தப்பிச்
சென்றார்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாந்த்ரா பகுதியில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால், பாந்த்ரா பகுதியில் இருந்து புறப்படும்போது தஷ்வந்த் தப்பிச் சென்றுள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.