செய்திகள்

பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கினார் முகமது சமி- மனைவியின் அடுத்த புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுசமி மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவரது மனைவி ஹசின்ஜஹன் புதிய புகார் ஒன்றை கூறியுள்ளார். #MohammadShami #HasinJahan

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுசமி. அவர் மீது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பு புகார்களை கூறினார்.

முகமதுசமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய விரும்புவதால் விவாகரத்து கேட்டு தொடர்ந்து தொல்லை தருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து முகமது சமி மீது கொல்கத்தா போலீசிலும் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதனால் முகமதுசமியின் பெயரை வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் சேர்க்காமல் கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் முகமதுசமி மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஹசின்ஜஹன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

முகமதுசமி, பாகிஸ்தானை சேர்ந்த அலி‌ஷபா என்ற பெண்ணிடம் பணம் வாங்கினார். மேட்ச் பிக்சிங் சூதாட்டத்துக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம். எதற்காக பணம் கொடுக்கப்பட்டது என்று என்னிடம் முகமது சமி கூறவில்லை.

முகமதுசமி, மனைவியான என்னை ஏமாற்றும்போது நாட்டை ஏன் ஏமாற்றி இருக்க மாட்டார். முகமது சமி பணம் வாங்கியதற்காக ஆதாரம் இருக்கிறது.

துபாய் ஓட்டலில் அவர் பாகிஸ்தான் பெண் அலி‌ஷபாவை சந்தித்தார். அந்த ஓட்டலில் அவர் அறை புக் செய்தாரா? இல்லையா? என்பதை சோதித்து பாருங்கள் என்றார்.

மனைவியின் புகார்களை முகமது சமி மறுத்து உள்ளார்.

அவர் கூறுகையில, “ஹசின்ஜஹன் சரியான மனநிலையில் இல்லை என்பதை நான் 100 சதவீதம் சொல்வேன். சூதாட்ட புகார் என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாகும். அதை கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும். அதுபற்றி முறையாக விசாரிக்க வேண்டும்.

எனதுஒப்பந்தம் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. நான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாரிடமும் பேசவில்லை. ஆனால் அவர்கள் இந்த வி‌ஷயத்தை சரியாக கையாள்வார்கள் என நம்புகிறேன் என்றார்.

என்னுடைய ஒரே கேள்வி என்னவென்றால் இவ்வளவு நாள் புகார் தெரிவிக்காமல் இப்போது திடீரென்று ஏன் புகார் கூறுகிறார் என்பது தான்.

SCROLL FOR NEXT