சண்டிகார்:
அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் சமீபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாபெரும் மகாபாரத விழா நடந்தது.
ஹிசாரைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்பவர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார். இதற்காக அவருக்கு ரூ.15 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால் குருஷேத்திர வளர்ச்சி கழகம் ரூ.4.32 கோடி மட்டுமே வழங்கியது. இதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செலவு விவரம் கேட்கப்பட்டு இருந்தது. அதன்மூலம் கிடைத்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரி உமாபாரதி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அரியானா, இமாச்சலப் பிரதேச கவர்னர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் உள்பட 10 முக்கிய பிரமுகர்களுக்கு பகவத்கீதை புத்தகத்தை ரூ.3.8 லட்சம் கொடுத்து வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் ‘ராதா-கிருஷ்ணன்’ நாட்டிய நாடகத்தில் பங்கேற்று நடனம் ஆடிய நடிகையும் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஹேமமாலினிக்கு ரூ.15 லட்சம் சம்பளமும், நடிகரும் டெல்லி பா.ஜனதா தலைவருமான மனோஜ் திவாரிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியான இந்த புள்ளி விவரங்களின் மூலம் பகவத் கீதையை இந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்க முடிவு எடுத்தது ஏன்? மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு முதல்-மந்திரி மனோகர்லால் கத்தார் பதில் அளிக்கையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விழா நடத்தப்பட்டது என்றார்.