அகமதாபாத்:
குஜராத் சட்டசமன்ற தேர்தலில் பா.ஜனதா 6-வது முறையாக ஆட்சியை பிடித்தாலும் கடந்த முறையை விட 16 இடங்கள் குறைந்தது.
பெரும்பான்மையை (92) விட பா.ஜனதாவுக்கு கூடுதலாக 7 இடங்களே கிடைத்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் 19 தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியது.
குஜராத்தில் பாரதிய ஜனதாவின் வீழ்ச்சிக்கும், காங்கிரஸ் எழுச்சிக்கும் இளம் தலைவரான ஹர்த்திக் பட்டேல் காரணமாக திகழ்ந்தார்.
படிதார் அனமத் அந்தோலன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அவர் இட ஒதுக்கீடுக்காக போராடி தனது இன மக்களை திரட்டியவர். குஜராத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தார். தனது முதல் தேர்தலிலேயே அவர் அதிரடியான தலைவராக உருவாகி உள்ளார்.
24 வயதான ஹர்த்திக் பட்டேல் குஜராத் தேர்தல் குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
22 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் எதிர்கட்சியான காங்கிரஸ் பலம் பெற்று இருக்கிறது. இதற்கு எனது கடினமான பிரசாரம்தான் காரணமாகும். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
என்னுடைய தீவிர பிரசாரத்தால் பா.ஜன தாவுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த கட்சியின் இலக்கு 150 தொகுதிகள் ஆகும். ஆனால் 99 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. அதுவும் சில தொகுதிகளில் குறைவான ஓட்டுகளில்தான் வென்றது. தற்போது பா.ஜனதாவின் தற்பெருமை எங்கே போனது. சிறப்பாக செயல் படாவிட்டால் அந்தக் கட்சி எதிர்காலத்தில் இதைவிட குறைவான இடங்களை பெறும்.
குஜராத் தேர்தல் நேர்மையாக நடந்து இருந்தால் பா.ஜனதாவுக்கு 78 முதல் 81 தொகுதிகள் தான் கிடைத்து இருக்கும். அந்த கட்சி மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லு முல்லு செய்து இருக்கிறது. எந்திரத்தில் மோசடி செய்யாவிட்டால் பெரும்பான்மை பெற முடியாது என்பதை பா.ஜனதா அறிந்து இருந்தது. இதனால் தான் சந்தேகத்தை தவிர்ப்பதற்காக 99 இடத்தோடு மின்னணு எந்திரத்தில் தில்லு முல்லு செய்வதை நிறுத்திவிட்டது.
இதற்கு தேர்தல் முடிவை பார்க்கலாம் சூரத், அகமதாபாத், மெக்சனா பகுதியில் பாரதிய ஜனதாவுக்கு எந்தவித செல்வாக்கும் கிடையாது. ஏனென்றால் படிதார் இன மக்களுக்கு அதிக பட்ச அட்டூழியங்களை செய்து இருக்கிறது. இதனால் மின்னணு ஓட்டு எந்திரத்தில் மட்டும்தான் அவர்களால் மோசடி செய்ய முடியும்.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.
குஜராத்தில் பா.ஜனதா வெற்றியால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. ஏனெனன்றால் இது மோசடியான வெற்றியாகும். காங்கிரஸ் 100 முதல் 102 இடங்கள் வரை கைப்பற்றும் என்று எதிர்பார்த்தேன். இந்த மோசடியால் அப்படி நடக்காமல் போய்விட்டது.
தேசியவாத காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சிகள் ஓட்டுகளை பிரித்ததால் காங்கிரசுக்கு சில தொகுதிகளில் பாதிப்பு இருந்ததை ஒப்புக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி கோவில்களுக்கு சென்றதை விமர்சிப்பது வேதனை அளிக்கிறது.
ராகுல் காந்தி அரசியலில் மேம்பட்டு வருகிறார். ஒவ்வொரு மாநில பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதில் முதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் மாபெரும் தலைவராக உருவாகி வருகிறார்.
நான் காங்கிரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பேனோ? அல்லது தனிக்கட்சி தொடங்குவேனோ? என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. எனக்கு 24 வயது தான் ஆகிறது. 2½ ஆண்டுகள் கழித்து இதுபற்றி முடிவு செய்வேன்.
பா.ஜனதாவை வீழ்த்த நான் மிகப் பெரிய திட்டம் வைத்துள்ளேன். ஜனவரி 1-ந்தேதியில் இருந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம், பீகார் உள்பட எந்த மாநிலத்துக்கும் சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ஹர்த்திக் படேல் கூறியுள்ளார்.