புதுடெல்லி:
குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி தேசிய அளவில் கவனம் பெற்றவர் ஹர்திக் படேல் (வயது 26). இவர் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் தலைவர் சோனியா வழங்கியதாகவும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கட்சியின் தேசிய வட்டாரங்கள் தெரிவித்தன.