செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில் பயணிகள் குறைவுக்கும் கட்டண உயர்வுக்கும் சம்பந்தமில்லை: மத்திய மந்திரி

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததற்கும், கட்டணம் உயர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய மந்திரி ஹர்திப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு டெல்லி மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மெட்ரோ ரெயில் விலை நிர்ணய குழு சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டிக்கெட் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விலை உயர்வு அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

கட்டண உயர்வு அமலுக்கு வந்தபின் டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் தினசரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தகவல் உரிமை ஆணையத்தின் அறிவிக்கை தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக, ஆர்.டி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், டெல்லி மெட்ரோ ரெயில் கட்டணம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரெயில்களில் செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 27.4 

லட்சமாக இருந்த எண்ணிக்கை அக்டோபரில் 24.2 லட்சமாக குறைந்துள்ளது. இதன்மூலம் தினசரி மெட்ரோ ரெயிலில் 

பயணம் செய்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 லட்சம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக கூறுகையில், கட்டண உயர்வு மெட்ரோ ரெயில் சேவையை கொன்று விடும் நிலைக்கு தள்ளியுள்ளது. மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தாவிட்டால் அது என்ன சேவை செய்யப் போகிறது என டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கேஜ்ரிவால் டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய இணை மந்திரி ஹர்திப் சிங் புரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆர்.டி.ஐ. அறிவிக்கையில் வெளியான மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறைவானதற்கும், மெட்ரோ ரெயிலின் கட்டண உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பதிலளித்துள்ளார்.