டெல்லி அரசின் சார்பில் விளம்பர செலவுகள் அதிகரித்து வருவது தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் கடந்த திங்கட்கிழமை இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாசுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகியோர் முதலமைச்சர் முன்னிலையில் தன்னை தாக்கியதாக ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து, முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் இன்று திடீரென நுழைந்த போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். தலைமை செயலாளர் தாக்கப்பட்டது குறித்த சி.சி.டி.வி. (கண்காணிப்பு கேமரா) வீடியோ பதிவுகள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், தனது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் மகிழ்ச்சி என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘போலீசார் விசாரணை நடத்தி வருவது தொடர்பாக மகிழ்ச்சி கொள்கிறேன். இதே தீரத்துடன் நீதிபதி லோயா மரணம் தொடர்பாகவும் அமித் ஷாவிடம் போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #tamilnews