செய்திகள்

சுதந்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - கேரளாவில் ஹாதியா பேட்டி

சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பினால் சுதந்திரம் கிடைத்ததை எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என ஹாதியா ஜகான் இன்று குறிப்பிட்டுள்ளார். #Hadiya #SheffinJahan

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா இஸ்லாமிய மதத்திற்குமாறி தனது காதலன் ஷபீன் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஜகானுக்கு தீவிரவாத பின்புலம் இருப்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், ஹாதியாவை தனது வசம் ஒப்படைக்க வேண்டும் என ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் ஹாதியாவின் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. “24 வயதுப்பெண் மனதளவில் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை எனவே அவரை எளிதாக ஏமாற்றலாம்” என அந்த தீர்ப்பில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, ஜகானின் தீவிரவாத பின்புலம் குறித்த குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது. 

கேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஜகான் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியது. 

ஹாதியா படித்து வரும் சேலம் கல்லூரியின் முதல்வர் அவருக்கு காப்பாளராக இருப்பார் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

ஹாதியாவின் திருமணம் செல்லாது என கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது. தங்களது வாழ்க்கைத் துணையை தேட பெண்களுக்கு முழு உரிமை உள்ளதாக அந்த தீப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு இன்று ஹாதியாவும், அவரது கணவர் ஜஹானும் வந்தனர். 

தங்களது வழக்கில் உறுதுணையாக இருந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் தலைவர் அபூபக்கருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹாதியா, ’மதம்மாறி திருமணம் என்பதால் எங்கள் திருமணம் விவாதப் பொருளாக மாறிவிட்டது. வேறொரு மதத்துக்கு மாறுவதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

நான் இஸ்லாம் மதத்துக்கு மாற முடிவு செய்தபோது பல முஸ்லிம் அமைப்புகளை அணுகி நான் உதவி கேட்டேன். ஆனால், யாருமே அதற்கு முன்வரவில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாதான் எனது வழக்கில் பக்கதுணையாக இருந்து சுப்ரீம் கோர்ட்டில் வாதாட உதவி செய்தது.

இறுதியாக சுதந்திரமாக இருக்கும் உரிமை பெற்றிருப்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார். #tamilnews #Hadiya #SheffinJahan