சென்னை:
சிவாஜி மணிமண்டபத்தை திறந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா, சென்னை, அடையாறில் நடிகர் திலகத்துக்கு மணி மண்டபம் அமைக்க 2.80 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் உத்தரவிட்டார்.
அம்மாவின் ஆணைக்கிணங்க, மணிமண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்ததையடுத்து, நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் மணிமண்டபம் திறப்பு விழா நடத்தப்படுவது, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும் எனும் உயர்ந்த எண்ணத்தோடு, அவரது பிறந்த நாளான 01.10.2017 அன்று தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா நடத்திட முதல்- அமைச்சர் உத்தரவிட்டார்.
திரைப்பட உலகம் பெருமை கொள்ளும் வகையிலும், மேலும் வளர்ச்சி அடைய பல்வேறு சலுகைகளை அளித்து, தமிழ்த் திரைப்படத்தொழில் நிலைத்து நின்று எழுச்சி பெற வழிவகுத்தவர் புரட்சித் தலைவி அம்மா.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ரூ.10 கோடி மானியமாக வழங்கி இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை இந்தியாவிலேயே முதன் முதலாக, தமிழ்நாடு அரசின் சார்பில் 2013 ஆம் ஆண்டு சென்னையில் மிகச் சிறப்புடன் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவரும் புரட்சித்தலைவி அம்மா தான்.
தரமான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கவும், புதிய திறமையாளர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டு தங்கள் திறமையினை வெளிப்படுத்த ஏதுவாகவும், குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை 1993 ஆம் ஆண்டு 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாகவும், 2004 ஆம் ஆண்டு அதனை மீண்டும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்ச ரூபாயாகவும் உயர்த்தி, திரை உலகை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவர் புரட்சித்தலைவி அம்மா.
பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ராஜா சாண்டோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன் ஆகிய அரும்பெரும் கலைஞர்களின் பெயர்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைத் துறை வித்தகர் விருதுகள் வழங்கி வந்த நிலையில், அம்மா, நடிகர் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் “நடிகர் திலகம் சிவாஜி விருதினை” அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், சமூகப் பொறுப்புடன் தரமாக சிறிய முதலீட்டில், திரைப்படங்களை தயாரித்து வெளியிடுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலான மானியம் மற்றும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரிக்கும், சிறந்த குறும் படங்களுக்கான விருதுகள், ஆகியவற்றை விரைந்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புரட்சித் தலைவி அம்மா ஆணையிட்டதுடன், “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், விரைவில் மிகப்பெரிய விழா எடுத்து வழங்கப்படும்” என்று சட்டப்பேரவையிலும் அறிவித்தார்.
அம்மாவின் ஆணைக்கிணங்க, 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகையர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரை “திரைப்பட விருதுகள்” பெற தேர்வு செய்தும், 2007 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டிற்கான திரைப்பட மானியம் பெறுவதற்கான தமிழ்த் திரைப்படங்களை தேர்வு செய்தும், 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த தொடர்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரை “சின்னத்திரை விருதுகளுக்கு” தேர்வு செய்தும், 2008-09 முதல் 2013-14 ஆம் ஆண்டு வரையிலான எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்திட்ட குறும்படங்களுக்கு “குறும்பட விருதுகள்” பெற தகுதியானவர்களைத் தேர்வு செய்தும், அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்திடும் வகையிலும் தமிழ்த் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உற்சாகமும், உத்வேகமும் பெறுகின்ற வகையிலும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து விருதுகளும், சென்னையில் சிறப்பான முறையில் விழாவெடுத்து, மிக விரைவில் வழங்கப்படும்.
இவ்வளவு பெருமைமிக்க நடிகர் திலகத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவரது புகழ் நாடெங்கும் பரவிடும் வகையில் நடிகர் திலகத்தின் மணிமண்டபம் திறப்பு விழா புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசிகளுடன், சீரோடும் சிறப்போடும் அம்மாவின் அரசின் சார்பில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொண்டு, நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தினை திறந்து வைப்பதில் அந்த குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உணர்வோடு மகிழ்ச்சி அடைகிறேன்.
நடிகர் திலகத்தின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நின்று தமிழகத்திற்கு மட்டுமல்ல அகில உலக திரையுலகத்திற்கும் பெருமை சேர்க்கும் என்று கூறி, எனது உரையை நிறைவு செய்கிறேன்.