பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிராத்வைட்டை (66) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 221 ரன்னில் சுருண்டது.
152 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ராவல் 4 ரன்னிலும், லாதம் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பிறகு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 54 ரன்கள் சேர்த்தார். அனுபவ வீரர் ராஸ் டெய்லர் அவுட்டாகாமல் 107 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து நியூசிலாந்து அணி 443 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 13 ரன்னுடனும், ஷாய் ஹோப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிராத்வைட் மேலும் 7 ரன்கள் சேர்த்து 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த அம்ப்ரிஸ் 5 ரன்னிலும், டவ்ரிச் 0 ரன்னிலும், ரெய்ஃபெர் 29 ரன்னிலும், ரோச் 32 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ஷாய் ஹோப் அரைசதம் அடித்து 64 ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 203 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து 240 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் வாக்னெர் 3 விக்கெட்டும், சவுத்தி, போல்ட், சான்ட்னெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.