நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு நடைமுறையில் இருக்கும் வகையில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டம் இரவு 11 மணிக்கு கூடுகிறது.
ஜி.எஸ்.டி அறிமுக கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் டிவிட்டரில் பதிவிடுகையில், ‘மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி.யை அவசர கதியில் அமல்படுத்தப்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.க. அரசு சுய விளம்பரத்துக்காகவே ஜி.எஸ்.டி.யை அரைவேக்காட்டுத்தனமாக அமல்படுத்துகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பிலும் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் அமல்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆரம்பத்தில் ஜி.எஸ்.டியை ஆதரித்து வந்தது. ஆனால், ஜி.எஸ்.டியை முழுமையாக முடிக்காமலும், திட்டமிடாமலும், நிறுவனங்கள் தயாராகாத நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் போல் அவசர கதியில் அமல்படுத்தப்படுகிறது’ என குற்றம் சாட்டியுள்ளார்.