செய்திகள்

ஹஜ் மானியம் ரத்து: அரசியல் தலைவர்கள் கண்டனம்

ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கான மானியங்கள் பலவற்றை ஏதேனுமொரு சாக்குபோக்கு சொல்லி, சிறிது சிறிதாக ரத்து செய்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது ஹஜ் பயணிகளுக்கான பயண மானியத்தையும் ரத்து செய்துள்ள பிற்போக்கு நடவடிக்கைக்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அப்தாப் அலாம் மற்றும் ரஞ்சன் பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியல் சட்டத்தின்படி ஹஜ் மானியம் சட்டபூர்வமானது”, என்று கூறியிருந்ததை மத்திய பா.ஜ.க. அரசு, வசதியாக மறந்து விட்டதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த காவேரி மேலாண்மை வாரியம், நாட்டு மக்களின் நலன் சார்ந்த ஆதார் உள்ளிட்ட வழக்குகளில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை அமல்படுத்துவதில் முரண்பாடு கொண்டு, அமைதி காக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, ஹஜ் மானியத்தை ரத்து செய்வதில் மட்டும் இத்தனை தீவிரமாக, விரைந்து நடவடிக்கைகள் எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்தது மட்டுமல்ல, ‘மானியம் அரசியல் சட்டபூர்வமானது’ என்று உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியதை மீறிய செயல் என்றே தி.மு.க. கருதுகிறது.

“வளர்ச்சி, கூட்டுறவு கூட்டாட்சி, ஊழல் ஒழிப்பு”, என்று மக்களிடம் பல வாக் குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இன்றைக்கு ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்து, நாட்டை “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பாதையிலிருந்து பின்னடைவை உண்டாக்கும் வேறு திசை யில் அழைத்துச் செல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். 

ஆகவே, ஹஜ் பயணிகளுக்கு மான்யம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

மத்திய அரசு ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கான மானியத்தை திடீர் என்று ரத்து செய்தது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. ஒரு அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்கவேண்டும். மேலும் மானியத்தை நிறுத்துவதென்றால் அனைத்து மதத்திற்கும் இந்த நிலை பொருந்தும். அரசாங்கம் வழங்கும் மானியம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமாக வழங்கவேண்டும். 

மதங்களை பார்த்து மானியத்தை வழங்குவதை தே.மு.தி.க. என்றைக்கும் வரவேற்காது. பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு திடீர் என்று ரத்து செய்துள்ளதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

 இஸ்லாமியர்களின் ஹஜ் புனிதப்பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. ஹஜ் பயணத்திற்கான வசதிகளை அதிகரிப்பதற்கு பதிலாக செலவு குறைப்பு என்ற பெயரில் வசதிகளைக் குறைப்பது பிற்போக்கானது.

ஹஜ் பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.450 கோடி செலவழிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இது ரூ.250 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் அரசுக்கு ரூ.250 கோடி மிச்சமாகும். ஆனால், ஹஜ் பயணிகளுக்கு அதைவிட 10 மடங்கு அதிக தொகையும், தேவையற்ற உடல் வலி, பாதுகாப்பு அச்சுறுத்தல், மன உளைச்சல் ஏற்படும். இதற்கெல்லாம் அரசு காரணமாகக்கூடாது.

இஸ்லாமியர்களின் புனிதக் கடன் ஹஜ் பயணம் தான் என்பதாலும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு தொலைதூர கடல் பயணம் ஒத்துவராது என்பதாலும் ஹஜ் பயணிகளை முன்பிருந்தவாறே விமானம் மூலம் அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வகையில் நாட்டின் ஹஜ் கொள்கையை அரசு மாற்றியமைக்க வேண்டும். 

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

இஸ்லாமிய பெருமக்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வந்த ஹஜ் பயணத்திற்கான மானியத்தை சிறுபான்மை மக்களுக்கு தொல்லையும், சிரமமும் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே பழி வாங்கும் உள்நோக்கத்தோடு மோடியின் மத்திய பா.ஜ.க. அரசு குறி வைத்து இத்தாக்குதலை தொடுத்துள்ளது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:-

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ‘ஹாஜிக்களுக்கு’ மத்திய அரசு எவ்வித மானியமும் அளிப்பது இல்லை என்பதுதான் உண்மை ஆகும். முஸ்லிம்களின் ஹஜ் பயணத்தில் இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாகக் கூறப்படு வதிலும் துளி கூட உண்மை இல்லை. மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான் என்பதை மறுக்க முடியாது. 

ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது. எனவே, இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு ‘மானியம்’ என்பதை மத்திய அரசு கூறாமல் இருப்பதுதான் ஹாஜிகளுக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், இந்திய அரசின் ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் மட்டுமே சவூதிக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையையும் தளர்த்தினால் ஹாஜிகள் தங்கள் விருப்பப்படி மெக்கா புனிதப் பயணம் செல்லும் நிலை ஏற்படும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக கடந்த ஆண்டு வரை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்து செய்து விட்டு சிறுபான்மையின பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்று கூறுவது நியாயமில்லை. 

மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி:-

ஹஜ் பயணிகளுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்வோம் என அறிவித்திருப்பது வெறுப்பு அரசியலின் உச்சத்தை வெளி காட்டுவதாக இருக்கிறது. இந்த மானிய தொகை முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கு செலவிடப்படும் என அறிவித்திருப்பது பிரச்சினையை திசை திருப்பும் செயலாகும்.

எனவே மத்திய அரசு வெறுப்பு அரசியலை நியாயப்படுத்தாமல் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரிப் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #tamilnews