திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்துமத உணர்வுகளை காயப்படுத்தும் வைரமுத்து ஏற்கனவே சீதை ராவணனிடம் சிரித்திருந்தால் ராம-ராவண யுத்தம் நடந்திருக்காது. திரவுபதி சிரிக்காமல் இருந்திருந்தால் மகாபாரத யுத்தம் நடந்திருக்காது என்றார். இப்போது ஆண்டாளையும் விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது.
ரஜினி ஆன்மிகவாதி. கமல் இந்து விரோதி. ஏழுமலையான் கோவில் உண்டியலுக்கு எதற்காக பாதுகாப்பு என்கிற கனிமொழி போன்றோரிடம் இருந்து உண்டியலை காப்பாற்றவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமானால் அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகும் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் பண வினியோகம் பெரிய அளவில் இருக்காது என்பதால் தங்கள் பலத்தை நிரூபித்துக்காட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் ஆளும் கட்சிக்கு வரலாம்.
உள்ளாட்சி தேர்தலில் ரஜினி போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கும்போது யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் அறிவிப்பேன், சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என ரஜினி கூறி உள்ளார்.
ரஜினியின் ஆன்மிக அரசியலை பா.ஜனதா கட்சி வரவேற்கிறது. அவருடைய அறிவிப்புக்கு பிறகு அவரை ஆதரிப்போமா என்கிற கேள்விக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. பா.ஜனதா கட்சியும் தேர்தலில் போட்டியிடும். ரஜினியின் அரசியல் வருகையால் பா.ஜனதா கட்சி பயப்படவில்லை. எங்களின் ‘‘சூப்பர் ஸ்டார் மோடி’’தான். அவருக்கு போட்டியாக யாரும் வரமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #TamilNews #BusStrike