தாராபுரம்:
பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா இன்று தாராபுரம் வந்தார். கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
நதி நீர் பிரச்சினையில் தி.மு.க. தகிடு தத்தம் போடுகிறது. சென்னை அரசு, மைசூர் அரசு சேர்ந்து கடந்த 1924 -ம் ஆண்டு 50 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.
இந்த ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் அணை கட்டுவதாக இருந்தாலும், கர்நாடகம் அணை கட்டுவதாக இருந்தாலும் இரு மாநிலங்களும் கலந்து பேசி தான் கட்ட வேண்டும் என இருந்தது.
ஆனால் கடந்த 1970-ம் ஆண்டு தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடகா ஹேமாவதியில் அணை கட்டியது. 1974-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது புதுப்பிக்கவில்லை.
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நல்லதும் நடக்காது. நியூட்ரினோ திட்டத்துக்காக தற்போது வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு சுகர் அதிகம் இருப்பதால் இப்படி நடக்கிறார்.
நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க. தான். அக்கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நியூட்ரினோ, மீத்தேன் திட்டமும் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டங்கள் கொண்டு வரும் போது மத்தியில் பா.ஜனதா அரசு இல்லை. கர்நாடகத்தில் ராகுல் பேசும் போது, பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று பேசி உள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை பக்கத்தில் வைத்து கொண்டு போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின் இது பற்றி என்ன நினைக்கிறார்.
திருநாவுக்கரசரை மேடையில் இருந்து இறக்கி விட்டு மு.க. ஸ்டாலின் காவிரி பிரச்சினைக்காக போராடட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார். இதில் மாவட்ட தலைவர் பொன் ருத்ரகுமார், மாவட்ட செயலாளர் சுப்பையன் என்கிற சுப்பிரமணி, எஸ்.கே. கார்வேந்தன், வக்கீல் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தாராபுரம் வந்த எச். ராஜாவுக்கு தமிழ் புலிகள் அமைப்பினர் கருப்பு கொடி காண்பிக்க முயன்றனர். அவர்கள் 4 பேரை தாராபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.