செய்திகள்

அமெரிக்கா: சீக்கிய கோவில் சுவற்றில் எழுதப்பட்ட மத எதிர்ப்பு செய்திகளால் பரபரப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவில் சுவற்றில் ஒரு மர்ம நபர் அம்மதத்திற்கு எதிரான செய்திகள் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு சீக்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், “ஹாலிவுட் கோவில்” எனவும் அழைக்கப்படுகிறது. 

இந்நிலையில், அந்த கோவில் சுவற்றில் கடந்த வியாழக்கிழமை மர்ம நபர் ஒருவர் சீக்கிய மதத்திற்கு எதிரான செய்திகளை எழுதியுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த கர்னா ராய் அந்த நபரை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், ஒரு கத்தியை எடுத்து “உனது கழுத்தை அறுத்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். 

இதையடுத்து, கர்னா இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிப்பதாக கூறி தனது கைபேசியை எடுத்து அந்த நபரை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அவரது இந்த செயலால் பயந்துபோன அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது கைபேசியில் பதிவு செய்த கர்னா அதை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு குறித்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர் எழுதிய அனைத்தும் சீக்கிய கொள்கைகளுக்கு எதிரானது என கர்னா ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவர் 'அந்த மர்ம நபரை கோவிலுக்குள் அழைத்துச் சென்று எங்களின் கொள்கைகள் குறித்து போதிக்க வேண்டும், என கூறினார்.