செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் போலி பதிவு எண் லாரியில் ரூ.20 லட்சம் இரும்பு கடத்தல்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் போலி பதிவு எண் லாரியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரும்புகளை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி இரும்பு பொருட்களை பாண்டிச்சேரிக்கு ஏற்றிச் செல்வதற்காக தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து ஒரு டிரைலர் லாரி வந்தது.

அந்த லாரியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 42 டன் எடை கொண்ட இரும்பு பொருட்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த லாரி, பாண்டிச்சேரியில் குறிப்பிட்ட முகவரிக்கு செல்லவில்லை, இரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரி, போலி ஆவனங்கள் மற்றும் போலி பதிவெண்ணுடன் வந்து இரும்புகளை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிறிஸ்டி விசாரணை நடத்தி வந்தார். 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இது தொடர்பாக தூத்துகுடியைச்சேர்ந்த சையது உமர்(37), காளிராஜ்(41), முத்துகுமார்(36) மற்றும் திருநெல்வேலியைச்சேர்ந்த முகேஷ்(28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 3 பேரை தேடிவருகின்றனர். கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.