செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே கள்ளக்காதல் தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கள்ளக்காதல் தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர், லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சத்யாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதனை அறிந்த சங்கர், மனைவியை கண்டித்தார்.

மேலும் இதுபற்றி கடந்த 15-ந் தேதி ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சத்யா, ஆரம்பாக்கத்தை அடுத்த அரும்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் ஷேக் முகமதுவின் மனைவி ‌ஷகிலா (28) நேற்று மாலை சங்கர் வீட்டின் வழியே நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த சங்கர், உனது கணவனால் தான் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது என கூறி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி விட்டார்.

இதில் ‌ஷகிலாவின் 2 கைகளில் இருந்த விரல்களும் துண்டானது. மேலும் வாய் மற்றும் தலையிலும் அவருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இன்று காலை சங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.