செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே சீட்டு பணத் தகராறில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டியில் சீட்டு பணத் தகராறில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராணியம்மாள். இவரது மகன் பழனி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கார் டிரைவர் கந்தன் ரூ. 2 லட்சம் சீட்டு பணம் கொடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் அவர் அந்த பணத்தை தராமல் சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கோவூரில் குடும்பத்தோடு தங்கி விட்டார். அவரிடம் சீட்டு பணத்தை தரும்படி பழனி அடிக்கடி கேட்டு வந்தார்.

இந்த நிலையில் கந்தன் சிறுபுழல்பேட்டைக்கு காரில் நேற்று இரவு வந்தார்.

அப்போது சீட்டு பணம் பிரச்சனை தொடர்பாக பழனிக்கும், கந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தன், வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பழனியின் தாயார் ராணியம்மாள் மீது காரை ஏற்றினார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். உடனே காரை அங்கேயே நிறுத்தி கந்தன் தப்பி ஓடினார்.

இதனைக்கண்ட கிராம மக்கள் கந்தனை விரட்டி பிடித்து தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தப்பி ஓடியபோது அதே பகுதியில் உள்ள சிறிய குட்டை ஒன்றில் கந்தன் மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

உயிருக்கு போராடிய கந்தனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராணியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் கந்தனுடன் இருந்த அவரது நண்பர்கள் சென்னை கோவூரைச்சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கந்தனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.