செய்திகள்

கும்மிடிப்பூண்டி: வி‌ஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயன்ற 2 பேர் வி‌ஷ வாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த குமரநாயக்கன்பேட்டை கிராம வயல்வெளியில் பாழடைந்த 25 அடி ஆழ கிணறு உள்ளது. நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த அதிகாரிகள் பால்ராஜ் (வயது 45), ரகுநாதன் (45) ஆகியோர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்க முயன்றனர்.

அப்போது கிணற்றில் இருந்து வெளியான வி‌ஷ வாயு அவர்களை தாக்கியது. இதில் பால்ராஜும், ரகுநாதனும் மயங்கினர். ஆட்டுக்குட்டியும் சுருண்டு விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாதிரிவேடு போலீசா ருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பால்ராஜும், ரகுநாதனும் இறந்து இருப்பது தெரிந்தது. ஆட்டுக்குட்டியும் இறந்து கிடந்தது.

2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான பால்ராஜுக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரகுநாதனுக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.