நீண்ட எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் இடையே குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் இன்று நடைபெற்றது. ஏற்கனவே ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பா.ஜ.க தலைவரிடம் காண்பித்துள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் குவிந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் ஆணையத்தில் சென்று முறையிட்டனர்.
இதையடுத்து வாக்குப்பதிவின் முழுமையான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பிறகே, வாக்குப்பதிவு துவங்கும் என்று குஜராத் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக மத்திய மந்திரிகள் பலரும் அலுவலகத்தின் வாசலில் காத்து கிடந்தனர். நேரம் செல்ல செல்ல பரபரப்பு கூடிக் கொண்டே சென்றது.
இந்நிலையில், கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையை தொடங்க அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.