பெங்களூரு:
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
குஜராத் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் வகேலா ராஜினாமாவை தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வகேலாவுக்கு நெருக்கமானவர்கள்.
இதனையடுத்து, மேற்கொண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யாமல் இருப்பதை தடுக்க கூவாத்தூர் பாணியில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து 50 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள ஈகிள்டன் என்ற தனியார் சொகுசு விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களுக்கு ராஜ உபசாரம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவர்களில் சில எம்எல். ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடலாம் என்ற சூழ்நிலை உள்ளது.
முன்னதாக, கர்நாடக மின்சாரத்துறை மந்திரி பி.கே. சிவக்குமார் நேற்று நள்ளிரவு அந்த சொகுசு விடுதிக்கு சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள விடுதியை சுற்றி கர்நாடக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பை மீறி அவர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை கைதிகளாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.