குடியாத்தம்:
தகப்பன் சொல் கேட்காத எந்த பிள்ளையும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என்று பல சினிமா படங்களில் வசனங்கள் கேட்டுள்ளோம்.
எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளை கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பதில்லை பெற்றோர் கூறும் அறிவுரையை பெரிய துன்பமாக நினைத்து சிலர் வழி தவறி வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.
அப்படி பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் 5 மாதம் கஷ்டத்துக்கு பின்னர் வீட்டிற்கு போன் செய்து மீட்கப்பட்டுள்ளார்.
குடியாத்தம் கள்ளூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிட தொழிலாளி இவரது மகன் லோகேஷ்வரன் (வயது 15).
வெங்கடேசன் அவரது மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். குடியாத்தத்தில் உள்ள ஒரு பள்ளியில் லோகேஷ்வரன் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் சரியாக படிக்கவில்லை என பள்ளியில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரை வெங்கடேசன் கண்டித்துள்ளார். நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார். இதனால் வெறுப்படைந்த மாணவர் லோகேஷ்வரன் கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறினார்.
மகன் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் பல இடங்களில் அவரை தேடி வந்தார். இது பற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து தேடி வந்தார். எங்கும் அவரை காணவில்லை.
வீட்டை விட்டு வெளியேறிய லோகேஷ்வரன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று அங்குள்ள பானிபூரி வியாபாரியிடம் வேலைக்கு சேர்ந்தார். கடும் கொளுத்தும் வெயிலில் நின்று பானிபூரி விற்பனை செய்தார்.
5 மாதங்களாக கஷ்டப்பட்ட பின்னர் தான் அவருக்கு தந்தையின் அக்கறை, படிப்பின் அவசியம் தெரிந்தது. மனம் நொந்துபோன மாணவர் நேற்று காலை மெரினா கடற்கரையில் உள்ள 1 ரூபாய் காயின் போனில் இருந்து வீட்டிற்கு போன் செய்தார்.
எதிர் முனையில் அவரது தந்தை போனை எடுத்ததும் அச்சத்துடன் லோகேஷ்வரன் போனை வைத்துவிட்டார். உடனே வெங்கடேசன் அந்த எண்ணிற்கு போன் செய்து தனது மகன் அங்கிருப்பதை அறிந்தார்.
குடியாத்தம் டவுன் போலீசாருடன் மெரினாவுக்கு சென்றனர். அங்கிருந்த லோகேஷ்வரனை இன்று காலை மீட்டனர்.
அவரை குடியாத்தம் அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்தில் மாணவனை அவரது தாய் கட்டி அனைத்து அழுதது கண்கலங்க செய்தது.
மாணவர்கள் வீட்டை விட்டு ஓடி இதுபோன்று கஷ்டப்பட கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். #Tamilnews