நாடு முழுவதும் ஒரே வரி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி., தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஜவுளி மற்றும் பட்டாசு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதில் அதிகமான பாதிப்பை சந்திக்க இருப்பது பட்டாசு தொழில்தான்.
கடந்த ஆண்டே பாதுகாப்பாற்ற சீன பட்டாசுகள் வருகையால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். சீன பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியபோதும் அந்த ரக பட்டாசுகள் வரத்து அதிகமாகவே இருந்தது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், ஜி.எஸ்.டி.யால் பட்டாசு ஆலைகள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம், சீன பட்டாசுகள் வரத்து அதிகரிப்புக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.100 கோடிக்கு மேல் பட்டாசு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் 1,221 பட்டாசு ஆலைகள் இருந்தாலும், அதில் 827 ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில்தான் உள்ளன. மீதமுள்ள 400 தொழிற்சாலைகள் பிற மாநிலங்களில் உள்ளன. இந்த ஆலைகளில் 51 தொழிற்சாலைகள் 12.5 சதவீத சுங்கத் தீர்வையையும், 14.5 சதவீத வாட் வரியையும் செலுத்தி வந்தன.
மீதமுள்ள தொழிற்சாலைகள் 14.5 சதவீத வாட் வரி மட்டும் கட்டி வந்தன. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளுக்கும் 28 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்துதான் பட்டாசு ஆலைகள் கடந்த 30-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் தற்போது நடைபெறும் இந்த போராட்டத்தால் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிபொருள் உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) தலைவர் ஆசைத்தம்பி கூறியதாவது:-
பட்டாசு தொழிலுக்கு 28 சதவீதம் வரி என்பது பாதிக்கத்தான் செய்யும். மேலும் பட்டாசுகளின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சீன பட்டாசுகளின் விலை குறைவாக இருப்பதால் அந்த வெடிகளின் வரத்து பேரிடியாகும். இதனால் வேலை நிறுத்த கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தால் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படும்.
அடுத்தக்கட்ட நிலை குறித்து ஆலோசிக்க இன்று மாலை கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.