செய்திகள்

ஜி.எஸ்.டி.வரி விதிப்பு எதிரொலி: திருப்பதியில் திருமண மண்டபம் - விடுதி கட்டணம் உயர்ந்தது

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு எதிரொலியாக திருமலை-திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி கட்டணம் உயர்ந்தது.

மாலை மலர்

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் விடுதிகளில் அறைகள் வழங்கப்படுகின்றன. அதற்காக, திருமலையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக மொத்தம் 6 ஆயிரத்து 500 அறைகள் உள்ளன.

மத்திய அரசு தற்போது சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி உள்ளதன் எதிரொலியாக ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரம் வரை கட்டண அறைகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.2 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை கட்டண அறைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானம் ஜி.எஸ்.டி.வரியோடு நிர்ணயித்துள்ள புதிய கட்டண விவரம் வருமாறு:-

ரூ.1,500 கட்டண அறைக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி.வரி வீதம் ரூ.1700 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.2 ஆயிரம் கட்டண அறைக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ரூ.2 ஆயிரத்து 500 கட்டண அறைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.வரியோடு ரூ.3 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரூ.3 ஆயிரம் கட்டண அறைக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம், ரூ.3 ஆயிரத்து 500 கட்டண அறைக்கு ரூ.4 ஆயிரத்து 100-ம், ரூ.4 ஆயிரம் கட்டண அறைக்கு ரூ.4 ஆயிரத்து 700-ம், ரூ.4 ஆயிரத்து 500 கட்டண அறைக்கு ரூ.5 ஆயிரத்து 300-ம், ரூ.6 ஆயிரம் கட்டண அறைக்கு ரூ.7 ஆயிரத்து 100-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தின் கட்டணமும் உயர்ந்துள்ளது. ரூ.10 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் உள்ள மண்டபத்திற்கு 18 சதவீதமும், ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் உள்ள மண்டபத்திற்கு 12 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விடுதி கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.