செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு: சிவகாசியில் பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக்

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 750 பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

மாலை மலர்

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்றது. இங்கு 700க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி இனங்களில் பட்டாசை ஆடம்பர பொருட்களில் சேர்த்து மத்திய அரசு அதற்கு வரியை அதிகரித்துள்ளது.

அதன்படி பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுவதுடன், லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வரி விதிப்பால் பட்டாசுகளின் விலையும் உயரும். இதன் காரணமாக வட மாநில வியாபாரிகளும் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர்.

எனவே பட்டாசு மீதான வரியை 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 750 பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தில் 700 பட்டாசு விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று விருதுநகர் வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு பட்டாசு உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜி.எஸ்.டி. வரியை மறு பரிசீலனை செய்வது குறித்து பிரதமரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.