புதுடெல்லி:
மத்திய அரசு வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்து ஒரே நாடு ஒரே வரி என்ற கோஷத்துடன் ஜி.எஸ்.டி.யை வருகிற 1-ந்தேதி முதல் அமல்படுத்துகிறது.
ஜி.எஸ்.டி. அறிமுக விழாவை கொண்டாடும் வகையில் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நாளை நள்ளிரவு 10.45 மணிக்கு கூடுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய வரி சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கருதப்படுகிறது.
நாடு சுதந்திரம் பெற்றதை நள்ளிரவில் அறிவித்தது போல் ஜி.எஸ்.டி. அறிமுக விழா நள்ளிரவில் நடத்தப்படுகிறது.பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடக்கும் சிறப்பு கூட்டத்தில் இரு சபைகளின் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்துகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,
மத்திய மந்திரிகள் மற்றும் சில மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் முக்கிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. ஜி.எஸ்.டி. தொடக்க நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு அவசர அவசரமாக அமல்படுத்துவது மிகுந்த கவலையளிக்கிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கையை தொடர்ந்து அவசர கோலத்தில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது மத்திய அரசின் மற்றுமொரு வரலாற்று பிழையாகும்.
ஜி.எஸ்.டி.யை முறையாக அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தியது. அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஜி.எஸ்.டி.யைப் பொறுத்த வரை ஆரம்பம் முதலே நாங்கள் ஆதரித்து வருகிறோம். ஆனால் அதனை அமல்படுத்த மத்திய அரசு கையாளும் வழி முறைதான் கவலையளிக்கிறது.
ஜி.எஸ்.டி. குறித்த தெளிவு இல்லாததால் ஒட்டு மொத்த வணிகர்களும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் குழப்பத்திலும் அச்சத்திலும் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. தொடர்பான முன்னேற்பாடுகள் முறை யாக செய்யப்படவில்லை. எனவே 6 மாத கால அவ காசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்டு கட்சிகளும் ஜி.எஸ்.டி. அறிமுக விழாவை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் துன்பப்படும் போது அதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று கம்யூனிஸ்டு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சீதாராம்யெச்சூரி கூறுகையில், ஜி.எஸ்.டி. அறிமுக விழாவை புறக்கணிக்க மாட்டோம். அதே நேரத்தில் எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்காது என்றார்.
காங்கிரசை பொறுத்த வரை அக்கட்சியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது. மூத்த தலைவர்கள் சிலர் ஜி.எஸ்.டி. கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று மேலிடத்துக்கு கருத்து தெரிவித்து இருந்தனர்.
உரிய விவாதங்களின்றி அவசர கோலத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யவார்த் திரிவேதி தெரிவித்துள்ளார்
ஆனால் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் போன்றவர்கள், ஜி.எஸ்.டி. காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. எனவே கலந்து கொள்வதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மன்மோகன்சிங் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
ஜி.எஸ்.டி. அறிமுக கூட்டம் வெறும் நாடகமே என விமர்சித்துள்ள தி.மு.க செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் இக்கூட்டத்தில் திமுக பங்கேற்காது என தெரிவித்துள்ளார்.