நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்றிரவு 12 மணிக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடியால் இந்த வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
5, 12, 18, 28 என 4 வகைகளாக வரி விதிப்பு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் காய்கறிகள், பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது வரி விதிப்பு இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
என்றாலும் வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது வரி விதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சில பொருட்களின் விலை மற்றும் கட்டணங்கள் எதிர்பார்த்ததையும் விட அதிகமாக உயர்ந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியால் ரெயில்களில் ஏ.சி. கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்கிறது.
ஏ.சி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, ஏ.சி. சேர் கார் மற்றும் முதல் வகுப்பு கட்டணமும் உயர்கிறது.
அதே நேரத்தில் இரண்டாம் வகுப்பு கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.
இந்த கட்டண உயர்வு 0.5 சதவீதமாக இருக்கும். ரெயில் டிக்கெட் மீதான சேவை வரி தற்போது 4.5 சதவீதமாக உள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வரும்போது 5 சதவீதமாக வரி உயர்த்தப்படுகிறது.
ரெயில் டிக்கெட்டுகளில் ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு கட்டணங்களுக்கு மட்டும் தான் சேவை வரி உள்ளது. 2 ஆயிரம் ரூபாயாக இருக்கும் கட்டணம் இனி ரூ.2,010 ஆக உயரும்.
இதே போல் ரெயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு சேவை வரி 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சரக்கு கட்டணமும் உயர்கிறது.
பால், விவசாய பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
ரெயில்வே துறையில் ஜி.எஸ்.டி.க்கான மென்பொருள் சேவையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வருகிற 3-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்.
வாகனங்கள் விலையிலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 சக்கர வாகனங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
என்றாலும் பெரும்பாலான சிறுரக கார்களின் விலையில் அதிகம் மாற்றம் இல்லை. ஹைபிரிட் வகை கார்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கார் நிறுவனங்கள் விலை அறிவிப்பை வெளியிட்ட பிறகே எந்தெந்த வகை கார்கள் விலை குறைந்துள்ளது. எந்தெந்த வகை கார்களின் விலை உயர்ந்துள்ளது என்ற முழு விபரமும் தெரியவரும்.
மாருதி கார் நிறுவனம் இன்று காலையிலேயே ஜி.எஸ்.டி. வரி விதிப்புப்படி கார்கள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளியிட்டது. சில வகை கார்களுக்கு 3 சதவீத வரி குறைப்பு கிடைத்துள்ளது. அந்த பயன்பாட்டை மாருதி நிறுவனம் அப்படியே வாடிக்கையாளர்களுக்கு திருப்பிவிட்டுள்ளது. எனவே சில வகை மாருதி கார்களை முன்பைவிட இனி குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
அதே சமயத்தில் ஹெரிடிகா(Ertiga), சியல் வகை மாருதி டீசல் கார்கள் விலை கணிசமாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை ஹைபிரிட் வகை கார்கள் என்பதால் ரூ.1 லட்சம் வரை விலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடஸ், டொயோட்டா, ஹூண்டாய், ஹோண்டா நிறுவனங்களின் 4 சக்கர வாகனம், இரு சக்கர வாகனங்களின் விலைகள் சற்று குறைந்துள்ளன. மெர்சிடஸ் ஜி.எல்.350 ரக கார் தற்போது 83 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இனி அது 80 லட்சத்துக்கு கிடைக்கும். ரூ.3 லட்சம் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அது போல மெர்சிடஸ் இ-கிளாஸ் கார்கள் ரூ.69 லட்சத்தில் இருந்து ரூ.67 லட்சமாக குறைந்துள்ளது. டொயோட்டா பார்ச்சுனர் கார் ரூ.31.9 லட்சத்தில் இருந்து ரூ.29.8 லட்சமாக குறைந்துள்ளது.
இன்னொவா கார் தற்போது ரூ.21.4 லட்சமாக உள்ளது. அது இனி 20.5 லட்சத்துக்கு விற்பனையாகும் என்று தெரிய வந்துள்ளது.
ஹுண்டாய் சிரிடா ரூ.14.6 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சமாக குறைந்துள்ளது. ஹூரோசூப்பர் ஸ்பிளண்டர் பைக் ரூ.55.6 ஆயிரத்தில் இருந்து ரூ.53 ஆயிரமாக குறைந்துள்ளது. அதுபோல ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ரூ.48.3 ஆயிரத்தில் இருந்து ரூ.44 ஆயிரமாக குறைந்துள்ளது.
ஆனால் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரியால் தங்க நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தங்க நகைகளுக்கு 1 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டது. தற்போது அது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 150-க்கு விற்கும்பட்சத்தில் அவர் ரூ.665 கூடுதலாக வரி செலுத்த வேண்டும்.
இதனால் வாடிக்கையாளரின் வாங்கும் திறன் குறையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒரு பவுன் (8 கிராம்) தங்க நகை வாங்குபவர் இனி 7 கிராம் மட்டுமே வாங்க முடியும்.
தங்க நகை தயாரிப்பாளர்கள் முன்பு வரி செலுத்த வேண்டியதில்லை. தற்போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இதனால் அவர்களின் உற்பத்தி திறன் குறையும் அபாயம் உள்ளது. எனவே தங்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறும் போது, முன்பு இருந்த 1 சதவீத வரி தற்போது 3 சதவீதமாக அதிகரித்து இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களின் சேமிப்பு குறையும். வாங்கும் நகையின் அளவு குறையும்.
விற்பனையை பொறுத்தவரை தொடக்கத்தில் மந்தமாக இருக்கும். நாளடைவில் அது சரியாகிவிடும் என்றனர்.