செய்திகள்

தங்கம், வைரத்திற்கு 3 சதவீத வரி: ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், தங்கம் மற்றும் வைரத்திற்கு 3 சதவீத வரி விதிப்பது என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், தங்கம் மற்றும் வைரத்திற்கு 3 சதவீத வரி விதிப்பது என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ல் அமலுக்கு வருகிறது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். பல மாநிலங்கள், அதை நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் இதற்காக சட்டசபைக் கூட்டத்தை கூட்டவில்லை. 

இதனிடையே, பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது. இதில், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என நான்கு விதமான வரிகள் உள்ளன

முன்னதாக கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற 14-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 1,200 பொருட்கள், 500க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு, வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி சட்டம் குறித்த 15-வது கவுன்சில் கூட்டம் நிதிமந்திரி அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடைபெற்றது. புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தங்கம், வைரம், ஜவுளிகள், காலணி, பிஸ்கட்டுகள் மற்றும் பீடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான வரி விதிப்புகள் இறுதி செய்யப்பட்டன்.

இதுபற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறுகையில், “தங்கம் மற்றும் வைரங்களுக்கு 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு 0.25 சதவீத வரி விதிக்கப்படும். 500 ரூபாய்க்கு குறைந்த மதிப்புள்ள காலணிகளுக்கு 5 சதவீதமும், அதற்கு அதிக மதிப்பிலான காலணிகளுக்கு 18 சதவீதமும், பீடிகளுக்கு செஸ் வரி இல்லாமல் 28 சதவீதமும் வரி விதிக்கப்படும். 

பட்டு மற்றும் சணல் பொருட்களுக்கு வரி இல்லை. ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதம், பருத்தி மற்றும் இயற்கை நாருக்கு 5 சதவீதம், செயற்கை இழைகளுக்கு 18 சதவீதம், பிஸ்கட்டுகளுக்கு 18 சதவீதம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவீதம் என்ற அளவில் வரிவிதிக்கப்படும்.

சிகரெட்டுக்கான வரி குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அடுத்த கூட்டம் 11-ம்தேதி நடைபெறும்” என்றார்.