செய்திகள்

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஜி.எஸ்.டி.யால் 95 சதவீத தேயிலை தூள் தேக்கம்

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஜி.எஸ்.டி. வரியால் 95 சதவீத தேயிலை தூள் தேக்கம் அடைந்தன. இதனால் விவசாயம் மற்றும் வர்த்தகம் கடும் பாதிப்பு அடைந்தது.

மாலை மலர்

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை ஏல மையம் உள்ளது. வாரம் 2 நாட்கள் இங்கு தேயிலை ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்டத்தின் பிறபகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பங்கேற்பார்கள்.

இந்நிலையில் ஜூலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி.யால் தேயிலைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற மையத்தில் வெறும் 5 சதவீதம் பேர்தான் கலந்துகொண்டனர். 95 சதவீத வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. 17 லட்சம் கிலோ தேயிலை ஏலத்திற்கு வந்தது. ஆனால் வெறும் 82 ஆயிரம் கிலோ தேயிலை மட்டும் விற்பனை ஆனது.

இதனால் சிறு தேயிலை விவசாயிகள் முதல் தேயிலை தொழிற்சாலை வரை கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர். தேயிலை தொழிற்சாலையில் சிறு தேயிலை விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாமலும், சிறு தேயிலை விவசாயிகள் தங்கள் வீட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தேயிலை ஏலம் நடைபெற்று விற்பனையான 5 சதவீத தேயிலைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி-க்கு எப்படி பில் போடுவது? என்று ஏல மையத்தில் குழப்பத்தில் உள்ளனர்.

இனி அடுத்த வாரமும் இதே நிலை தொடர்ந்தால் சிறு தேயிலை விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகி விடும் என்று விவசாயிகள் கூறினர்.