இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பி வந்தது.
அதை மாற்றியமைக்கும் விதமாக உள் நாட்டிலேயே (இந்தியாவிலேயே) மிகப் பெரிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை தயாரித்துள்ளது. இது கிரையோ ஜெனிக் தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது.
இது 640 டன் எடை கொண்டது. ஆனால் உயரம் மிக சிறியது. அதாவது 43 மீட்டர் உயரம் கொண்டது. இது 200 யானைகளின் எடைக்கு சமமானது. இந்த ராக்கெட் 8 டன் எடையை சுமந்து செல்ல முடியும். அதனால் இதன் மூலம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்ல முடியும்.
அதற்கு வசதியாக இந்த ராக்கெட்டின் மேல் பகுதியில் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பூமிக்கு பத்திரமாக அழைத்து வரும் வகையில் 3 ஆயிரத்து 775 கிலோ எடை கொண்ட கப் வடிவிலான அறை போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 7-வது முறையாக இன்று மாலை 5.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது.
அதற்கான 25½ மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 3.28 மணிக்கு தொடங்கியது. கவுன்ட்டவுன் முடிந்த நிலையில், சரியாக இன்று மாலை 5.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. அது திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ராக்கெட் ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்புக்கான செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. இந்த செயற்கை கோள் 3,136 கிலோ எடை கொண்டது. இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளை விட மிக அதிக எடை கொண்டது. அதாவது ஒரு யானை எடை கொண்டது.