செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.

மாலை மலர்

ஐதராபாத்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “எங்களது அடுத்த பணி, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதுதான். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். கனரக தகவல்தொடர்பு செயற்கைகோள்களை ஏந்திச்செல்லும் ஆற்றல் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை அடுத்த மாதம் (ஜூன் மாதம்) முதல் வாரம் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் அந்த ராக்கெட்டின் பாகங்களை ஒன்று சேர்ப்பதற்கான செயல்பாடுகள் நடந்து வருவதாகவும், அதைத்தொடர்ந்து வெப்ப கவசத்தில் செயற்கைகோள் இணைக்கப்படும் பணி நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

2.2 டன்னுக்கும் அதிகமான எடைக்கொண்ட செயற்கைகோள்களை வெளிநாட்டில் இருந்துதான் ஏவ முடியும் என்றும், 4 டன்கள் மற்றும் அதற்கு மேலான செயற்கைகோள்களையும் இங்கிருந்து ஏவுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஏ.எஸ்.கிரண்குமார் குறிப்பிட்டார்.