கைது 
செய்திகள்

தஞ்சை அருகே தோப்பில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்த பாமக பிரமுகர் கைது

தஞ்சை அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோப்பில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்த பாமக பிரமுகரை கைது செய்தனர்.

மாலை மலர்

வல்லம்:

தஞ்சை அடுத்த வல்லத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் புது ஆற்றுக்கரையில் உள்ள ஒரு தோப்பில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக வல்லம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வல்லம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த தோப்பில் பானையில் காய்ச்சு வைக்கப்பட்டிருந்த 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். மேலும் ஒரு பேரலில் வைக்கப்பட்டிருந்த ஊரலையும் கண்டு பிடித்து அழித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த தோப்பின் உரிமையாளரும், பா.ம..க தஞ்சை மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளருமான வல்லம் ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் (வயது42) என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.