செய்திகள்

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் குழுவை கலைக்க 31-ந்தேதி முடிவு எடுக்கப்படும்: ஐகோர்ட்டு

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் குழுவை கலைப்பது குறித்து வருகிற 31-ந்தேதி முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, சகாயமும் விசாரணை நடத்தி ரூ.ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடுகள் நடத்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சகாயம் குழுவில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரத்துக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவுக்கு மொத்தம் ரூ. 58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறி அது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார். இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு சம்பளம் வழங்கியது குறித்து எதுவுமில்லை என்றனர்.

மேலும், சகாயம் தலைமையிலான விசாரணை குழுவை ஐகோர்ட்டு தான் அமைத்தது. அந்த குழுவை கலைக்க வேண்டும் என்றால், அது குறித்து ஐகோர்ட்டு தான் முடிவு செய்யும்’ என்று கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ‘கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன் கவுல் தலைமையிலான முதன்மை அமர்வு, இந்த விசாரணை குழுவை கலைத்து விட்டது. ஆனால், இந்த குழு தொடர்ந்து செயல்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்’ என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகாயம் குழுவின் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் வாதம் செய்தார். அவர், ‘கிரானைட் முறைகேடு குறித்து 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கு தான் முடிவுக்கு வந்துள்ளது. மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, இந்த விசாரணை குழுவும் தொடரத் தான் செய்யும்’ என்று கூறினார்.

அப்போது கிரானைட் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘சகாயம் தன்னுடைய அறிக்கையை ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று கூறியுள்ளார். இது தவறான அறிக்கையாகும். மதுரையில் அந்த அளவுக்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படவில்லை’ என்று கூறினார்.

இதற்கும் வக்கீல் எம். ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ஓய்வுப்பெற்ற தாசில்தாருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘உரிய ஆவணங்களை கொடுத்தால், அதை சரி பார்த்து சம்பளம் வழங்கப்படும்’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 31-ந் தேதி தள்ளிவைப்பதாகவும், அன்று சகாயம் குழுவை கலைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.