செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டையில் பாட்டியை அடித்து கொன்ற பேரன்

புதுவண்ணாரப்பேட்டையில் மதுகுடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட பாட்டியை பேரனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை புதுகுடியிருப்பில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கவின்குமார் (19).

கடந்த 6-ந் தேதி இரவு மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது மகாலிங்கத்தின் தாயார் சின்னப்பொண்ணு (96) தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கவின்குமார் அவரை அடித்து கீழே தள்ளினார்.

இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் மகாலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து கவின் குமாரை கைது செய்தார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.