விபத்து 
செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலத்த காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள ஆவாரங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 50). மாரி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கண்ணம்மாள் அவரது மகன் மாணிக்கம் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சுரேஷ் என்பவருடன் கண்ணம்மா இருசக்கர மோட்டார் சைக்கிளில் காளிபேட்டை என்ற பகுதிக்கு மாவு அரைப்பதற்காக சென்றிருந்தார். 

பின்னர் மாவை அரைத்துவிட்டு திரும்பி வரும்போது சுரேஷ் ஓட்டிவந்த இருசக்கர மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்தது. இதனால் நிலைதடுமாறி பின்னே அமர்ந்திருந்த கண்ணம்மாள் கீழே விழுந்தார். இந்த விபத்தில் கண்ணம்மாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அந்த வழியாக வந்தவர்கள் கண்ணம்மாளை மீட்டு காளிபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கண்ணம்மாளை கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கண்ணம்மாள் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT