தற்கொலை 
செய்திகள்

பட்டதாரி பெண் தூக்குபோட்டு தற்கொலை - செல்போனை தாய் பறித்து கொண்டதால் எடுத்த விபரீத முடிவு

கிருமாம்பாக்கம் அருகே செல்போனை தாய் பறித்து கொண்டதால் வேதனை அடைந்த பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவில் ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் சுமத்ரா (வயது20). இவர் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமத்ரா வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமத்ராவிடம் இருந்த செல்போனை அவரது தாய் சுமதி பறித்து வைத்து கொண்டார்.

இதனால் சுமத்ரா கோபத்தில் சாப்பிடாமல் இருந்து வந்தார். நேற்றுகாலை வழக்கம் போல் கிருஷ்ணமூர்த்தி கட்டிட வேலைக்கு சென்று விட்டார். சுமதி அந்த பகுதியில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சுமத்ரா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்துவீடு திரும்பிய சுமதி வீட்டில் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சுமத்ராவை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுமத்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சுமத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.