செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே பட்டதாரி பெண் மாயம்

அஞ்சுகிராமம் அருகே பட்டதாரி பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே உள்ள ஸ்ரீலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவரது மகள் கலைவாணி (35). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைவாணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு நேற்று கலைவாணி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த கலைவாணி திடீரென்று மாயமானார். மகளை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் ராஜேந்திரன் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். புகாரில் பில்லிசூனியம் காரணமாக தனது மகள் மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நேற்று இரவு கலைவாணி வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து அவரை அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

போலீசாரிடமும் தான் கோவிலுக்கு சென்றதாக கலைவாணி தெரிவித்தார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.